தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்பமான ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான இரண்டாவது திறன்காண் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் உட்பட மூவர் இலங்கைக்கான புதிய சாதனைகளை நிலைநாட்டினர்.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதே மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது திறன்காண் போட்டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அனித்தா முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இஷார சந்தருவன் 5.11 மீற்றர் உயரம் தாவி இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இதற்கு முன்னர் இவரது சாதனை 5.10 மீற்றராக இருந்தது.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சரித் கப்புகொட்டுவ 17.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இவரது முன்னைய சாதனை 17.03 மீற்றர் தூரமாக இருந்தது.
ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கு மேலும் ஐவர் தகுதி
தியகமவில் நடைபெறும் திறன்காண் போட்டிகளின் போது அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய ஐவர் ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான அடைவு மட்டத்தை எட்டியதன் மூலம் அப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெற்றுக்கொண்டனர்.
ஆண்களில் வினோஜன் சில்வா (100 மீற்றர், 10.32 செக்.), ஜீ. எம். பிரேமகுமார (400 மீற்றர், 46.36 செக்.), எச். எம். டிலிப் ருவன் (400 மீற்றர், 46.41 மீற்றர்), தனூக்க லியனபத்திரண (நீளம் பாய்தல் 7.88 மீற்றர்), பெண்களில் ருமேஷிகா ரட்நாயக்க (100 மீற்றர், 11.60 செக்.) ஆகியோரே ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றவர்களாவர்.
ஏற்கனவே தகுதி பெற்ற ஐவருடன் இதுவரை மொத்தம் பத்து மெய்வல்லுநர்கள் தகுதி பெற்றுள்ளனர்.






