வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தின் 100வது நாள் ஊர்வலம்!!

279

 
நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று​ (03.06.2017)​ மதியம்​ 12.00மணியளவில்​ மேற்கொண்டனர்.

வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது.

இதனை முன்னிட்ட வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர்.

ஊர்வலத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் ​
உறவுகள் அமெரிக்கா தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் தமிழர்களாகிய நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அமெரிக்கா தமிழர் தாயகத்திற்கு வந்து எமக்கு எப்போதும் உதவியளிக்க வேண்டும், எமக்கு அமெரிக்கா மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும் என அமெரிக்காவின் இலச்சனை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோரிய கொடியும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, தமக்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

​இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளது திரும்பிச் சென்று விட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ‘ நாம் அமெரிக்காவின் உதவியைக் கோருகிறோம்’ என எழுதப்பட்ட பதாதைகள், மற்றும் அமெரிக்க கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் மேற்கொண்டமையால் அவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம்பெறுவதால் தாம் கலந்து கொள்ள வில்லை என மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஊடகவியலாளிடம் தெரிவிருந்தனர். ​