மத்யூஸ்க்கு காயம் : தரங்கவுக்கு தடை : இலங்கையின் அடுத்த தலைவர் யார்?

561

இலங்கை அணித்தலைவர் மத்யூசிற்கு ஏற்பட்ட காயம் காரணத்தினால் உபுல் தரங்க அணித்தலைராக பொறுப்பேற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது.

டொப் 8 அணிகள் பங்கேற்றுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் கடந்த 1ம் திகதி தொடங்கியது.
முன்னதாக, இலங்கை அணித்தலைவர் மத்யூசிற்கு ஏற்பட்ட காயம் காரணத்தினால் உபுல் தரங்க அணித்தலைராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்க தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

அதேசமயம் போட்டியின் போது இலங்கை அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அணித்தலைவராக செயல்பட்ட தரங்கவிற்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் யூன் 8ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதவுள்ளன.

அடுத்த போட்டி ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்கள் வரையில் இருப்பதனால், காயம் காரணமாக ஓய்விலிருக்கும் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருவேளை அடுத்த போட்டியில் மத்யூஸ் உடற்தகுதி பெறாத பட்சத்தில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.