காப்புறுதி பணத்திற்காக 8 வயது மகளை கொன்ற தந்தை : 6 வருடங்களின் பின் கைது!!

225

காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகளை கொலை செய்து, அந்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனையை வழங்கியிருந்தது.

குற்றவாளிகள் மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று கினிகத்தேனை பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 2009 ஆம் ஆண்டு தனது 8 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்ததுடன் மனைவியையும் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளி விசாரணைகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாது புறக்கணித்து வந்த நிலையில், குற்றவாளி இல்லாமலேயே நுவரெலியா மேல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

மேலும், மனைவியை வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் 7 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும் குறித்த நபர், கண்டி அலவத்துகொடை பிரதேசத்தில் திருமணமான பெண்ணொருடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த பெண்ணுக்கு சொந்தமான சொத்துக்களை நபர் கைப்பற்றிக்கொண்டுள்ளார். சொத்துக்களை கைப்பற்றிய நபர் , பெண்ணை கைவிட்டு, புத்தல, எகொடவத்தை பிரதேசத்தில் தச்சு தொழிலாளியாக மறுவேடத்தில் இருப்பதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

புத்தள பிரதேசத்தில் பெண்ணொருவரை மணந்துள்ளதுடன் அந்த பெண்ணுக்கும் ஒரு ஆண் குழந்தை இருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை, குற்றவாளி இன்று ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நாளைய தினம் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.