ஜேர்மனியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் பணியின்போது சோர்வடைந்து அப்படியே கம்ப்யூட்டர் கீ போர்டின் மீது கைகளை வைத்துப் படுத்துத் தூங்கி விட்டார்.ஆனால் அதன் விளைவு தவறான நபருக்கு பெருமளவிலான பணத்தை மாற்றி இப்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
ஒரு குட்டித் தூக்கம் இப்போது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கிலும் சிக்கி விட்டார். பணியின்போது அசட்டையாக இருந்தால் என்ன மாதிரியான விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த ஊழியரைத்தான் தற்போது ஜேர்மனியில் அனைவரும் உதாரணமாக கூறிக் கொண்டிருக்கின்றனராம்.
சற்றே கண்ணயர்ந்தார்
ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பணியில் இருந்த போது சற்று கண்ணயர்ந்து விட்டார். ஓய்வு பெற்ற ஊழியர் சம்பந்தமான கணக்குகளை வரவு வைக்கும் போது உறங்க ஆரம்பித்த ஊழியர் தலையை கம்யூட்டர் கீபோர்டில் வைத்து விட்டார். இதனால் இரண்டு என்ற எண் 11 முறை பதிவாகிவிட்டது.
அனுப்ப வேண்டியது 62.40 யூரோ தான்
அந்த ஊழியர் ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குக்கு 62.40 யூரோ பணத்தை ஒன்லைனில் மாற்ற வேண்டும்.தூங்கியதால் வந்த வினை ஆனால் பணியின்போது சோர்வு காரணமாக அவர் அப்படியே கீபோர்டிலேயே படுத்துத் தூங்கி விட்டார். அங்குதான் அவருக்கு விதி விளையாடி விட்டது.
293 மில்லியன் யூரோ
இதனால், அந்த வாடிக்கையாளரின் கணக்கில் 62.40 யூரோக்கள் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக 222,222,222,22 யூரோக்களாக பதிவானது. அவரின் மேலதிகாரியும் இந்தத் தவறைக் கவனிக்காமல் கையெழுத்திட்டு விட்டார். பின்னர் தவறு வேறு துறையினரால் கவனிக்கப்பட்டதால் சரி செய்யப்பட்டது.
போடுங்கப்பா வழக்கை
தற்போது இந்த ஊழியர் மீது வங்கி சார்பில் தொழிலாளர் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர். அதேபோல வேலையை விட்டும் தூக்கி விட்டனர். தூங்காதே தம்பி தூங்காதே என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்..