கல்விக்காக நீண்ட தூரம் நடந்து செல்லும் வடக்கு மாணவர்கள் : பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்!!

743

 
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளிலும் போக்குவரத்து வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் பிற்பகல் குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகளில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமையினாலும் மாணவர்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியில் காலை 7.00 மணிக்கும், 7.30 மணிக்கும் இடையில் சேவையில் ஈடுபடுகின்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லை.

இதனால் புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, தேராவில், வள்ளிபுனம், கைவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் பாடசாலைகளுக்கு காலம் தாழ்த்தி செல்வதும் பாடசாலைக்கு செல்லாது திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ஏ-9 வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லை. இதனால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்லாத நிலையில் வீதியால் செல்லும் ஏனைய வாகனங்களை வழிமறித்து அவற்றில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

இதனைவிட பின் தங்கிய பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இன்மையால் தினமும் 6 அல்லது 7 கிலோமீற்றர் தூரம் கால் நடையாகச் சென்று தங்களது கல்வியைத் தொடர்கின்ற நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே மாணவர்களின் கல்வி தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும், சமூக நலன்விரும்பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மாணவர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான கூட்டங்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்ற போதும் அவை தீர்க்கப்படும் என கடந்த நான்கு வருடங்களாக வாக்குறுதிகளை வழங்கப்படுகின்றன. ஆனால் அவை நிறைவேற்றப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.