வற்றாப்பளையில் ஆணிக்கூர்முனை காலணி அணிந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிய யுவதி!!

219

 
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தொலை தூரத்தில் இருந்து நடைபவனியில் சென்ற பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை மனத்திருப்தியுடன் நிறைவேற்றிவருவதை காணக்கூடியதாக உள்ளது.

குறித்த அடியார்களிடம் வரும் வழியில் தடைகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்று வினவியபோது அவர்கள் கூறியதாவது,

“நாங்கள் கண்ணகி அம்மனுக்கான எமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு மிகத்தொலைவில் இருந்து நடந்து இங்கு வந்துள்ளோம்.

வரும் வழியில் கேப்பாப்புலவு இராணுவமுகம் பிரதான வீதியில் இராணுவத்தினரால் எமது பயணம் தடைப்பட்டது. எனினும் அவர்கள் காட்டிய மாற்று வழியூடாக நாங்கள் பயணித்து கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தோம். இன்று எமது நேர்த்திக் கடன்களை மனத்திருப்பியுடன் நிறைவேற்றியுள்ளோம்.

மேலும் நாங்கள் வரும்போது எத்தரப்பினரையும் நம்பி எமது பயணத்தை தொடரவில்லை. கண்ணகி அம்மனில் நம்பிக்கை வைத்தோம் அந்த நம்பிக்கை நிறைவேறியுள்ளது.

தொடர்ந்தும் நாங்கள் இங்கிருந்து எமது வீடுபோய் சேர்வதற்கும் கண்ணகி அம்மன் துணைநிற்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தொலை தூரத்தில் இருந்து கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற ஆயிரக்கணக்காண அடியார்கள் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்தி அம்மனின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து நடைபவனியில் வந்த யுவதி ஒருவர் ஆணிக்கூர்முனை காலணி அணிந்து கண்ணகி அம்மன் ஆலயத்தின் வெளி வீதியை மூன்று முறை சுற்றி வந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இந்த ஆலயம் நோக்கி தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றனர் தொடர்ந்து நாளை அதிகாலை வரை கண்ணகி அம்மன் வைக்காசிப் பொங்கல் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.