தனது செல்லிடத் தொலைபேசியை உற்றுப்பார்த்தவாறு நடந்துகொண்டிருந்த பெண்ணொருவர், 6 அடி பள்ளத்தில் வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
நியூ ஜேர்ஸி மாநிலத்தின் பிளெய்ன்பீல்ட் நகரிலுள்ள வீதியின் நடைபாதையில் 67 வயதான பெண் ணொருவர் தனது செல்லிடத் தொலை பேசிக்கு வந்த தகவலை வாசித்தவாறு நடந்துகொண்டிருந்தார்.
அந்த நடைபாதைக்கு குறுக்காக கட்டடமொன்றின் கீழ் தளத்துக்காக அமைக்கப்பட்டிருந்த திறந்த கதவை அப்பெண் அவதானிக்கவில்லை.
இதனால், அக்கதவில் எதிர்பாராதவிதமாக மோதிய அப்பெண் 6அடி பள்ளத்தில் வீழ்ந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பொதுமக்கள் பாதுகாப்புப் பணிப்பாளர் கார்ல்ட் ரீலி இது தொடர்பாக கூறுகையில், “வாகனம் செலுத்தும் போது தொலைபேசி ஊடாக தகவல்களை பரிமாறுவது நல்லதல்ல என எண்ணியிருந்தேன். இப்போது, நடந்துகொண்டு இவ்வாறு தகவல்களை பரிமாறுவதும் நல்லதல்ல” என்றார்.







