100 சதங்கள் கண்ட சங்கக்கார : குவியும் வாழ்த்துகள்!!

453

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜம்பவான் குமார் சங்ககாரா ‘ஃபர்ஸ்ட்-கிளாஸ் மற்றும் லிஸ்ட்-ஏ’ போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சங்கக்கார கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ஓட்டங்கள் விளாசி, 100வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடிக்கும் 37வது நபர்தான் அவர் என்பது, இந்த சாதனையின் வீச்சை பற்றி அறியச் செய்யும்.

இச்சாதனை குறித்து சங்கக்கார, ‘இந்த சாதனை படைத்ததில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு உண்மையில் 100 சதங்கள் குறித்து எந்த நியாபகமும் இல்லை.

ஆட்டத்தை முடித்துக் கொண்டு பெவிலியன் திரும்பிய பின்னர்தான் அதைப் பற்றி கூறினார்கள். நான் கிரிக்கெட்டை இன்னும் நேசித்துத்தான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

எது குறித்தும் நான் டென்ஷனாகவில்லை. முறையான பணி-வாழ்க்கை சமநிலையே இந்த சாதனைக்குக் காரணம்’ என்று நெகிழ்ந்துள்ளார்.

தற்போது விளையாடி வரும் தொடரோடு ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டில் இருந்தும் சங்கக்கார ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.