வெலிவேரியவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக,இராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து,இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க கூறியுள்ளார்.
இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கையில், சட்டவரம்புகளுக்கு உட்பட்டே படையினர் நிலை நிறுத்தப்பட்டதாகவும் ஆனால்அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தமது கடமைகளுக்கு அப்பால் நடந்து கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்து நடக்கும் நீதிமன்ற மற்றும் காவல்துறை விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்குப் பொறுப்பானவர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காக சான்றுகளின் சுருக்கம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் முடிந்த பின்னர் இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகள் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வெலிவேரிய சம்பவத்தின் போது அங்கிருந்த படையினருக்குப் பொறுப்பாக இருந்த பிரிகேட் தளபதி ஒருவர் மற்றும் மூன்று மூத்த அதிகாரிகள் தற்போது அவர்களின் சொந்த படைப்பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான படையினர் அல்லது அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும். மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் காணப்பட்டால் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை நிச்சயம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.