வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதி தமிழ் அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

842

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (12.06) அன்று எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளருக்கு நேற்றையதினம் (13.06) வழங்கிய விசேட செவ்வியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா மாவட்டத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்ட பேரின்பராசா பாலேஸ்வரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர்..

தமிழ்த் தலைவர்கள் யுத்தகாலத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி அமைதியாக இருந்தார்கள் என நாங்கள் கருதினாலும் கூட யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நல்லாட்சி அரசில் தமிழ்த் தலைவர்கள் மிகவும் தெளிவானவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்த் தலைவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களில் அக்கறை காட்டாமலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளாத நிலையிலும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமிழ்த்தலைமைகள் மீது வெறுப்புக் காட்டியமைக்கு காரணம் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை நாங்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளோம். இருந்தபோதும் எங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எமது போராட்டங்களில் தமிழ் தலைமைகள் முன்வந்து பங்கு கொண்டு எமது கோரிக்கைகள் தொடர்பான தீர்வுக்காக போராடுவதுடன் ஆதரவு தந்து அக்கறை காட்டவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தலைவர்கள் முன்பாக வைக்கிறேன் எனத் தெரிவித்தார்.