வடக்கில் அதிரடி மாற்றம் : முதல்வராக சீ.வி.கே.சிவஞானம்?

321

வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சையும் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சீ.வி.கே.சிவஞானம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபையின் ஏனைய பொறுப்புக்களின் புதிய நியமனம் தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படாத நிலையில் முதலமைச்சரை மாற்றுவது தொடர்பில் மாத்திரம் செய்திகள் வெளியாகியுள்ளன.