ஹட்டன் விபத்தில் சிறுமி உயிரிழப்பு : டிப்பர் வண்டிக்கு தீயிட்டுக் கொளுத்திய மக்கள்!!

293

ஹட்டன் – நானு ஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்று காலை 7 மணியளவில் பாடசாலை செல்வதற்காக 6 வயது சிறுமியொருவர் பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட போது, டிப்பர் வண்டி ஒன்று மோதி விபத்து நேர்ந்துள்ளது. ரதல்லை தோட்டத்தைச் சேர்ந்த சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து வாகனம் நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றதினால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பிரதேச மக்களால் டிப்பர் வண்டிக்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வாகன சாரதி நானு ஓயா பொலிஸில் சரணடைந்திருந்தார். எனினும், குறித்த சாரதி சம்பவ இடத்திற்கு வருகை தரும் வரை சிறுமியின் சடலத்தை அகற்ற அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து பிரதேச மக்களினால் சுமார் 8 மணி நேரம் கவனயீர்ப்புப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக ஹட்டன் – நானு ஓயா பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. மேலும், பதற்ற நிலைமை அதிகரித்ததை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார். அவரினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய, சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதன் பின்னர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிற்பகல் 2.30 மணியளவில் கலைந்து சென்றனர். இதேவேளை, நானு ஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நானு ஓயா பொலிஸ் நிலையத்திலிருந்து அவரை நுவரெலியாவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பிராந்தியத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை அவரை தற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.