சீ.வி. விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்!!

527

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்கட்சித் தலைவருக்கு இன்றைய தினம் கடிதமொன்று அனுப்பினார்.
குறித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

மூன்று விடயங்களின் அடிப்படையில் இந்த விடயம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான் தற்போது தொலைபேசியில் வடமாகாண ஆளுநரை தொடர்புகொண்டு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்பிலுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும்.

நாம் வெகுவிரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.