வடமாகாண சபை அங்கத்தவர்களின் செயற்பாடு புரியாத புதிராக இருக்கின்றது : ம.தியாகராசா ஆதங்கம்!!

336

மக்கள் மனங்களிலே ஏற்பட்ட உணர்வுகளுக்கு அமைவாக இந்த உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்திலே செயற்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசாவின் அலுவலகத்தில் நேற்று (20.06.2017) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண சபையிலே நடந்து கொண்டிருக்கின்ற பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்ததையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாடுபட்ட கட்சி தலைவர்கள், மதகுருமார்கள் எல்லோருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

வடமாகாண சபையை பொறுத்தமட்டிலே உங்களுக்கு தெரியும் புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த வட மாகாண சபையிலே வட மாகாணத்திலே இருக்கின்ற மக்கள் எல்லோரும் ஒருமித்த குரலோடு ,ஆதரவோடு, உணர்வோடு வாக்களித்தார்கள் என்னென்று சொன்னால் மாகாண சபையினூடாக ஏதாவதொரு விடிவை பெறவேண்டும் என்பதற்காக 2013ம் ஆண்டு மாகாண சபைக்கு உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தார்கள்.

அதே வேளை மக்களிடையே இருக்கின்ற மக்கள் மனங்களிலே ஏற்பட்ட உணர்வுகளுக்கு அமைவாக உறுப்பினர்கள் இந்த வட மாகாணத்திலே செயற்படவில்லை என்பது தான் என்னுடைய கருத்து.

என்னை பொறுத்த மட்டில் வவுனியா மாவட்டத்திலே நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். எனது பிரதேசம் விவாசயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற பிரதேசம்.

இதே போன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் கூடுதலாக மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.அவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் எல்லாம் வேறு விதமாக அமைந்திருக்கின்றது.

அந்த வகையிலே அந்த தேவைகளை இனங்கண்டு அந்த தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பது தான் இந்த உறுப்பினர்களுடைய கடமை. அதை விட்டு இந்த உறுப்பினர்கள் ஏனோ தானோ என்று மாகாண சபையிலே நடந்து கொள்வதும், உறுப்பினர்களுடைய செயற்பாடும் மக்கள் மத்தியிலே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

எங்களுடைய மாகாண சபையிலே இருக்கின்ற அமைச்சர்களுடைய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றமை உங்களுக்கு தெரியும். இந்த அமைச்சர்கள் செய்கின்ற ஊழல் மோசடிகளுக்கு அப்பால் அமைச்சர்களுடன் பல தடவைகள் மாகாண சபையிலும் சரி வெளியிலும் சரி நான் அவர்களுடன் ஆதங்கப்பட்டிருக்கின்றேன், அவர்களுடன் சண்டை பிடித்திருக்கின்றேன்.

காரணம் என்னவென்று சொன்னால் எங்களுடைய வவுனியா மாவட்டத்திலே இருக்கின்ற மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவர்கள் செய்ய தவறிவிட்டார்கள் என்ற சந்தர்பத்திலே தான் நான் அவர்களுடன் சண்டை பிடித்திருக்கின்றேன்.

அந்த வகையில் எந்தவொரு அமைச்சர்களையும் நான் ஊழல் மோசடி செய்தார்கள் என்று குற்றம் சாட்டவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்யவும் என்ற கருத்தையும் நான் சபையில் முன்வைக்கவில்லை. இந்த குற்ற சாட்டை முன்வைத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுகட்சி உறுப்பினர்கள் தான் இந்த குற்ற சாட்டுகளை முன் வைத்தார்கள்.

அந்த வகையில் தான் அவர்கள் ஐங்கரநேசனின் மீது இந்த குற்றச்சாட்டுக்களை கொண்டு வந்து அவர்களே ஊழலை கண்டுபிடித்து அவரை தனியாக நீக்குவதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளில் தான் நாங்கள் முரண்பட்டோம்.

ஏனென்று சொன்னால் இந்த மாகாண சபையிலே இருக்கின்ற நான்கு அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகிய ஐந்து பேரும் ஒருமித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே ஒரு அமைச்சரை மட்டும் தனியாக ஊழல் மோசடி செய்கின்றார். என்ற பிரச்சினையை நாங்கள் கொண்டு வரகூடாது என்று நான் வாதாடினேன்.

அதற்கு அமைவாக எங்களுடைய கட்சியிலே அங்கம் வகிக்கின்ற அனைத்து அங்கத்தவர்களும் ஒட்டுமொத்தமாக எங்களுடைய கருத்துக்கு உடன்பட்டு நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் மோசடி விசாரணை செய்ய வேண்டும்.

ஒரு அமைச்சர் மீது மாத்திரம் விசாரணை செய்யவதை ஏற்க மாட்டோம் இதற்கு நாங்கள் உடன்படவும் மாட்டோம் என நாங்கள் எதிர்த்து நின்றோம்.

அந்தவகையில் தான் தனியாக அமைச்சர் ஐங்கரநேசனை விலக்க வேண்டும் என்று செயற்பட்ட இந்த தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இன்று தங்களுடைய கட்சியிலே இருக்கின்ற அமைச்சர்களையும் விலக்க வேண்டிய சந்தர்பத்திலே இருக்கின்றார்கள்.

இது அவர்களால் ஏற்பட்ட பிரச்சினை என்று தான் நான் கூற விரும்புகின்றேன். அமைச்சர்களுடைய மாற்றம் என்பது அமைச்சர்களுடைய ஊழல் மோசடி என்பது ஒரு தேவையில்லாத பிரச்சினை அவர்களே கொண்டு வந்து அவர்களே ஊழல் இல்லை பிரச்சினை இல்லை என்று திரும்பவும் வேறு விதத்தில் வாதாடிக்கொண்டிருக்கின்ற இந்த அங்கத்தவர்களுடைய செயற்பாடு என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

ஆகவே நான் கூறுவது என்னவென்று சொன்னால் இந்த அமைச்சர்களுடைய செயற்பாடு உண்மையாகவே சரியோ, பிழையோ என்பதற்கு அப்பால் இனி வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்த நாங்கள் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்காக என்ன நோக்கத்திற்காக வாக்களித்தார்களோ அந்த மக்களுடைய தேவைகளை இனங்கண்டு செய்வதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.

மக்கள் என்னுடன் இப்படியான ஆதங்கத்தை இரண்டு வாரமாக பகிர்ந்து கொண்டார்கள். இதனால் தான் நான் இப்படியாக ஒரு ஊடக சந்திப்பை ஒழுங்குபடுத்தினேன்.

தமிழரசு கட்சியில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் மற்றைய கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்களோடு இணைந்து எங்களுக்கு வாக்களித்த இந்த மக்களுக்கு நல்லதொரு செயற்பாட்டை செய்ய வேண்டும். நல்லதொரு வேலைத்திட்டத்தை செய்து மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.