வவுனியாவில் தேசிய மட்ட துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சி!!

498

 
வவுனியா மாவட்ட பாடசாலை மட்டத்திலான கடின பந்து துடுப்பாட்டத்தினை ஊக்குவித்து தேசிய மட்டத்திலான வீரர்களை உருவாக்கும் நோக்கில் கடின பந்து துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் றதீபன் தலைமையில் நேற்று(25.06) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது மாவட்டத்தின் துடுப்பாட்டத்தின் வளர்ச்சிக்காக குறித்த சங்கம் எடுத்து வருகின்ற முயற்சிகள் தொடர்பாகவும் வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், கடின பந்து தொடர்பாக பாடசாலைகளினது பங்களிப்பு தொடர்பாகவும், விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் அனுசரணையுடன் இடம்பெற இருக்கின்ற பாடசாலை மட்டத்திலான கடினப் பந்து சுற்று போட்டிக்கான வெற்றிகிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ம.தியாகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா , சட்டத்தரணிகளான கெங்காதரன், இளங்குமரன் ஆகியோரும், மாகாண , மாவட்ட மட்ட பயிற்றுவிப்பாளர்களும், மாவட்ட மட்ட துடுப்பாட்ட சங்க நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.