தபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

802

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி வீதியிலுள்ள மத்திய தபால் பறிமாற்றகத்தில் தபால் நிலையமொன்றை ஸ்தாபித்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு சுற்று நிரூபத்திற்கு அமைய ஊழியர்களை இணைத்து கொள்ளும் செயற்பாடுகளில் தபால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கலை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை எவ்வித உரிய தீர்வும் வழங்கப்படவில்லை என்பதால் பணிப்பகிஷ்கரிப்பு மீள ஆரம்பிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 25,000 மேற்பட்ட தபால் ஊழியர்கள் இணைந்துக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  எவ்வாறாயினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் எச்.ஏ.ஆர்.நிஹால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்னவிடம் வினவியபோது…

தபால் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு பகிஷ்கரிப்பை முன்னெடுப்பது நியாயமில்லை என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தபால் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக திட்டமிடப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறும் தபால் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இரண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கோரி அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமராநந்த வடுகே குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய 11 சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்த இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை சில மாகாணங்களில் பணியாற்றும் சுகாதார துறைக்கான சாரதிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறும் வலியுறுத்தப்பட்டமைக்கு அமைவாக மாகாண அதிகாரிகள் செயற்படவில்லை எனவும் அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமராநந்த வடுகே தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ள நிலையில் மாகாண அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார துறை சாரதிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறும் அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.