தென் ஆபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய அணி!!

298

u19champion india

நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றில் தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளம் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடந்தது. நேற்று நடந்த இறுதிச்சுற்றில் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித்தலைவர் யாசீன் வாலி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது.

ஹெர்வாத்கர் 25 ஓட்டங்களும், அணித்தலைவர் விஜய் ஜோல், அரைசதம் கடந்து 71 ஓட்டங்களும், ரிக்கி புய் 46 ஓட்டங்களும், தீபக் ஹோடா 32 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் சர்பராஸ் கான் 67 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆபிரிக்கா சார்பில் ஜஸ்டின் தில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி இந்திய பந்துவீச்சில் திணறியது. 28.1 ஓவரில் 66 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஜாசன் ஸ்மித் 23 ஓட்டங்களும், அணித்தலைவர் யாசீன் வாலி 13 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் சுருண்டனர்.

இந்தியா சார்பில் ஆமிர் கானி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ், சர்பராஸ் கான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலிய, சிம்பாவே அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த சிம்பாப்வே அணி 50 ஓவரில் 228 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சுலப இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணிக்கு டமியன் மார்டிமர் (100) சதம் அடித்து கைகொடுக்க 41.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி மூன்றாவது இடம் பிடித்து ஆறுதல் பெற்றது. சிம்பாவே அணி இறுதி இடம் பிடித்தது.