மேலைத்தேய நாடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் அன்றாடம் பல செய்திகள் வெளிவருகின்றன. ஆயினும் இலங்கையில் அவ்வாறான செய்திகள் வருவது இல்லை. எனினும் இலங்கையிலும் வேற்றுக் கிரகவாசிகளுக்கு பெயர்பெற்ற இடங்கள் பல காணப்படுகின்றன. அவ்வாறான இடங்கள் அறியப்படாத இரகசியங்களாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இவ்வாறான இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. ஆனாலும் ஆய்வுகள் மட்டும் நடத்தப்பட்டவாறே இருக்கின்றன.
மேற்கு நாடுகளுக்கு சமமான அமானுஷ்ய இடங்கள் இலங்கையிலும் இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஓர் இடமே மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நாலந்த சிலை மண்டபம். இது ஓர் வித்தியாசமான, அமானுஷ்ய இடமாக கூறப்படுகின்றது.
இந்த மண்டபமானது சூரியனின் ஒளிக்கற்றைகளில் இருந்து வரும் சக்தியை உறுஞ்சும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கட்டட அமைப்பு இந்தியாவின் கட்டடக் கலையோடு பொருந்துவதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அடுத்ததாக லகேகல எனும் மலை. இது கண்டி மாத்தளை எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. ஊர்மக்களும் ஆய்வாளர்களும் இதனை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
இந்த மலைக்கு மேல் குறிப்பிட்ட சில தினங்கள் பிரகாசமான ஒளிகள் தோன்றுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்த மலை உச்சியில் பறக்கும் தட்டுகள் அவதானிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் குறித்த மலையை ஆய்வு செய்த ஆய்வாளர்களில் ஒருவரான மெரெண்டே ஒபே சேகர “இந்த மலையில் வேற்றுக்கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் வாயில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், சிவப்பு நிறத்தில் நிலத்தை கொண்ட பிரதேசமாக உஸ்ஸங்கொட எனும் பகுதி அமைந்துள்ளது. நீண்ட காலங்களுக்கு முதல் இந்தப் பகுதியில் விண்கல் ஒன்று மோதியதாலேயே இவ்வாறு நிலம் நிறமாற்றத்தினை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்தப் பகுதியில் எரிமலைக்குழம்பான லாவா எனப்படும் கனிமம் பாறைகளாக காணப்படுகின்றது. அத்துடன் உலோகக் கனிமங்கள் சிலவும் இதில் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல பொலன்னறுவையில் அமைந்துள்ள திவங்க எனும் பௌத்த வழிபாட்டுத்தலம் இது வித்தியாசமானதோர் கட்டட அமைப்பினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆழமான அத்திவாரம் அற்ற ஓர் கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அதேபோல இங்கு விண்வெளி உடை அணிந்த ஓர் வேற்றுக்கிரகவாசியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு பறக்கும் தட்டுகள் வருவதாகவும், அதில் இருந்து வரும் ஒளிக்கீற்றுகள் சிலையின் மீது படிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மத்திற்கான விடைகள் கொடுக்கப்படவில்லை எனினும் சர்வதேச ஆய்வாளர்களும் இந்த இடம் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொலன்னறுவை பகுதியில் மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள திபுலாகம ரஜமஹா விகாரைக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இன்றுவரை நம்பப்படுகின்றது.
குறித்த வழிபாட்டுத்தலத்தின் மேல் பல வர்ணங்களில் ஒளிவட்டங்கள் தோன்றி மறைவது அவதானிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அங்கு பறக்கும் தட்டுகளும் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இலங்கையில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து அதிகம் பேசப்படும் ஓர் இடமே தானிகல மலை ஆகும்.
பார்வைக்கும் இது மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட இடமாக உள்ளது. ஓர் தளம் போன்றே இந்த மலையானது காணப்படுகின்றது.
மேலும் இந்தப்பகுதி ஏலியன் மலை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த இடத்திற்கு மேல் பலரும் பறக்கும் தட்டுகளையும் அவதானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதன் காரணமாக இலங்கையும் கூட வேற்றுக்கிரவாசிகளுக்கும், பறக்கும் தட்டுகளுக்கும் பெயர் பெற்ற இடமாகவே கூறப்படுகின்றது. எனினும் இலங்கையர்கள் இது குறித்த தேடல்களில் அதிகம் ஈடுபடாத காரணத்தினால் இவை பொய்களாகவும் மதத்தோடும் ஒப்பிடப்பட்டும் வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.






