சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் : டெனீஸ்வரன்!!

261

வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும் வேதனைகளும் மாறி மாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று, இவ்வாறு சோதனைகள் வருகின்ற போது மாணவர்கள் துவண்டுவிடக்கூடாது மாறாக மன உறுதியோடு செயற்படுதல் வேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக அருட்சகோதரி பவளராணி கலந்து கொண்டார். மேலும் குறித்த 10 மாணவர்களையும் பாடசாலைச் சமூகம் ஒன்று சேர்ந்து பேசாலை நகரப்பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

தனக்கு கல்வி பயிற்றுவித்த அருட்சகோதரர் ஸ்டானிஸ்லாஸ் அவர்களே இப்பாடசாலையின் தற்போதைய அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

அவர் செல்கின்ற பாடசாலைகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு சேவையாற்றி அதனை முன்னிலைக்கு கொண்டுவருகின்ற ஒரு நபர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு அமைந்திருக்கின்றது.

இன்னும் ஒருசில வருடங்களில் ஏனைய பெரிய பாடசாலைகள் மதிக்கின்ற அளவிற்கு இப்பாடசாலையை உயர்வுக்கு கொண்டு வருவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும் வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும், வேதனைகளும் சந்தோசங்களும் மாறிமாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாக இருக்கின்றது.

இவ்வாறு சோதனைகளும், வேதனைகளும் இல்லாத வாழ்க்கை எவருக்கும் இல்லை. சோதனைகள் வருகின்றபோது மாணவர்கள் துவண்டுவிடாது மன உறுதியோடு செயற்பட்டு அந்த சோதனைகளை படிக்கட்டுக்களாக மாற்றி அதனூடாக சிகரத்தை அடைந்து சாதனை படைக்கின்ற மாணவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டும்.

மேலும் ஒருவிடயத்தினை மேற்கொள்ளும் முன்னர் அது படிப்பாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதாக இருந்தாலும் அல்லது எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அது சரிதானா என்பதனை ஒருதடவைக்கு இருதடவை நன்கு சிந்தித்ததன் பின்னர் செயற்படுங்கள்.

அவ்வாறு செயற்படும்போது நிச்சயமாக சரியான விடயங்களை சரியாக இனங்கண்டு அதனூடாக நாம் வெற்றியடைய முடியும் என்பதோடு மட்டுமல்லாது நம்மை சூழவுள்ளவர்களுக்கும் அது நன்மையாக அமையும்.

தீய செயல்களிலிருந்தும் நாம் விலகியிருக்க முடியுமென்றும். அத்தோடு ஒரு பாடசாலையின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பது வெறுமனே அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கைகளில் மாத்திரம் இல்லை.

பாடசாலை சமூகம் பக்க பலமாக இருந்தால் மட்டுமே பாடசாலையின் வளர்ச்சியோடு கூடிய சந்தோசத்தினையும் அனுபவிக்க முடியுமென்றும், அந்தவகையில் பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுக்கு உந்து சக்தியாக செயற்பட வேண்டும்.

இறுதியாக இவ்வருடம் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து வாழ்த்துகின்றேன்.

அத்தோடு எதிர்வருகின்ற வருடங்களில் இதனைவிட பலமடங்கு மாணவர்கள் சாதனையாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கூடிய வாழ்த்துக்களை கூறியதோடு அதற்காக இறைவனை பிரார்த்திக்கின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.