செங்கோல் மீது கைவைத்தால் 8 வாரங்கள் தடை : புதிய நிலையியல் கட்டளைகள்!!

212

நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்க விழுமியங்களை மீறிச் செயற்படும் எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் அமைந்துள்ள புதிய நிலையியல் கட்டளைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் இதை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் அந்த வாரத்துக்குள் எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கின்றார் என்றும் அறியமுடிகின்றது.

இலங்கை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நவீன யுகத்துக்கேற்ப முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உத்தேச வரைபு நகல் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உத்தேச வட்ட வரைபு குறித்து திருத்தங்களை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 22ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இறுதி வரைபு செவ்வாயன்று நிறைவேற்றப்படவுள்ளது.

புதிய நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் சபை அமர்வுகளின்போது ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றாது, குழப்பங்களை ஏற்படுத்தும் எம்.பிக்களுக்கு இரண்டு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகரால் தடைவிதிக்க முடியும்.

அத்துடன், சபை அமர்வைக் குழப்பியடிக்கும் வகையில் செங்கோல் மீது கைவைத்து அதை தூக்கிச் சென்றால் குறித்த உறுப்பினருக்கு எட்டு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடைவிதிப்பதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, கேள்வி பதில் நேரத்தின்போது எம்.பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் இருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எம்.பிக்களின் வருகை உட்பட ஏனைய விடயங்கள் குறித்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிலையியல் கட்டளைகள்,

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானவை இணங்கப்பட்ட விதிகளாகும். இவற்றின் கீழ் நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன.

நிலையியல் கட்டளைகளின் பிரதான நோக்கமானது,

நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வகுத்துரைப்பதாகும்.

நிலையியல் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மிக முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவனவாகவும் உள்ளன.

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசமைப்பின்கீழ் நிலையியல் கட்டளைகள் விதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நூல்நிலையத்தில் காணப்படுகின்ற பதிவுகளின்படி நிலையியல் கட்டளைகளின் முதலாவது தொகுதி அப்போதைய சட்டவாக்கச் சபையால் 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அப்போதைய பிரிட்டன் நாடாளுமன்றத்தை இவை அடிப்படையாகக் கொண்டமைந்தன. அதன் பின்னர் நாடாளுமன்ற வரலாற்றிலே பல்வேறு கட்டங்களிலே அத்தகைய புதிய நிலையியல் கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்பாடு செய்யலாமென இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசமைப்பின் 74ஆம் உறுப்புரை குறிப்பிடுகின்றது.

முன்னர் நடைமுறையில் இருந்த நிலையியல் கட்டளைகளுக்குப் பொருத்தமான மாற்றங்களை மேற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள நிலையியல் கட்டளைகள் 1978ஆம் ஆண்டு அரசமைப்பின்கீழ் கட்டமைக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன.

சபையால் காலத்துக்குக் காலம் நிலையியல் கட்டளைகளுக்குத் திருத்தங்கள் கொண்டுவர முடியும். 123ஆம் நிலையியல் கட்டளையின்கீழ், நிலையியல் கட்டளைகள் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும்.

பொதுத் தேர்தலொன்றின் பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத்தின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள், உறுப்பினர் இருக்கை ஒழுங்கு, சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவுசெய்தல்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம், கூட்டங்களுக்கான திகதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயித்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதாக தற்போதைய நிலையியல் கட்டளைகள் தொகுதி காணப்படுகிறது.

கூட்ட நடப்பெண், நாடாளுமன்ற அலுவல்கள் போன்றனவும் கூட நிலையியல் கட்டளைகள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அவசர சட்டமூலங்களுக்கான நடைமுறைகள், தனியார் உறுப்பினரின் சட்டமூலம், ஒதுக்கீட்டுச் சட்டமூலம், வாக்களித்தல் போன்றனவும் நிலையியல் கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டுள்ளன.

விவாதத்துக்கான ஒழுங்குவிதிகள், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள், உரையாற்றா உறுப்பினர்களுக்கான விதிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஒழுங்கு போன்ற விடயங்களை நிலையியல் கட்டளைகள் தெளிவாக நெறிப்படுத்துகின்றன.