லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன் : வடக்கு சுகாதார அமைச்சர்!!

292

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனதுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும்விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன்.

எனினும் அவ்வாறான விசாரணைக்குழு அமைக்கப்படாதவிடத்து மத்திய அரசின் சட்டபூர்வமான விசாரணைக் குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் நானாக ஆஜராகி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படுவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் ஒருபோதும் விசாரணைக்கு பயந்தவன் அல்ல. பயப்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் எந்தவிதமான குற்றங்களையும் செய்யவில்லை.

இந்த மாகாணத்தின் சுகாதாரதுறை அபிவிருத்திக்காகவும், கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காவும் பணி செய்யவே எனது மருத்துவ தொழிலை இராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தேன்.

அமைச்சுப் பதவியும் நான் கேட்டுப் பெற்றுக்கொள்வில்லை. துறைசார் அனுபவத்தின் அடிப்படையில் கட்சியின் தலைமையும், மாகாண முதலமைச்சரும் என்னை அமைச்சராக நியமித்தார்கள். அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட பதவியைக்கொண்டு மாகாணத்தின் சுகாதார துறை அபிவிருத்திக்கும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது சக்திக்கும், மாகாண சபையின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் அர்ப்பணிப்புடன் எனது கடமையை செய்திருக்கின்றேன்.

தற்போதும் செய்துகொண்டிருக்கின்றேன். கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டுள்ள பொதுமக்கள், முன்னாள் போராளிகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த மனைவிமார், விசேட தேவைக்குட்பட்டவர்கள், இவர்களை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக நாங்கள் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

அவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவற்றை எனது அமைச்சு செய்து வருகின்றது. அதைவிடுத்து வெறும் ஆவேசப்பேச்சுக்களை மட்டும் பேசி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மக்களோடு மக்களாக அவர்களின்துன்பதுயரங்களில் பங்கெடுத்தவன் என்ற வகையில் அவர்களின் துயரங்களை நன்கறிவேன். கடந்த மூன்றரை வருடங்களில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது.

இதை கண்கூடாக பார்க்கலாம். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். எனினும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும், பதவி மோகத்தினாலும் சிலர் என்மீது அபாண்டமான பழியைச்சுமத்தியுள்ளனர்.

மக்கள் தங்கள் வாக்குபலத்தினினால் தங்களுக்கு சேவை செய்யவே எங்களை தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

மக்கள் மனங்களிலுள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது எனது கடமையாகும். அதை செய்வதற்காக சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாணைக்குழு முன்னிலையில் அல்லது மத்திய இலஞ்சஊழல் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவுள்ளேன் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவில் தாம் ஆஜராகமாட்டேன் என இவர் முன்னர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.