வட மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் இன்று பதவியேற்பு!!

655

SRI LANKA-TAMIL-VOTE

வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் எதிர்வரும் 11 ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் நிறைவுபெற்றதன் பின்னர் வட மாகாண அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாண சபை அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரே முடிவெடுப்பார் என்று தெரிவித்ததற்கிணங்க, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் தான் முதலமைச்சராகப் சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர், அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் கூறிய கருத்தினை கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.