வவுனியா சிறுவர் இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக புதிய முறைப்பாடு!!

698

 
கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, வேப்பங்குளம், அன்பகம் சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, குறித்த சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கு தங்கியிருந்த சகோதரியும், சிறுமியின் தாயாரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பாலியல் துஸ்பிரயோகம் குறித்து முன்னரே தெரிந்திருந்த போதும் அதனை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை இருந்ததாகவும், தற்போதும் ஒரு சிறுமி மரணமாகியுள்ளமையால் இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அதனை வெளிப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மரணித்த சிறுமியின் சகோதரி மற்றும் தாயார் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும், வவுனியா பொலிஸ் நிலையத்திலும், மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் கடிதம் மூலம் தமது முறைப்பாட்டினை செய்துள்ளனர். அம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2013ம் ஆண்டு செப்ரெம்பர் 7ம் திகதி அன்பகம் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த பெ.நிசாந்தினி என்ற 13 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டிருந்தார். அப்போது சகோதரியாகிய என்னுடன் ஏற்பட்ட முரண்பட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை. எனது சகோதரி மரணித்தமைக்கு அன்பகத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்பகத்தில் தங்கியிருந்த ஆண்கள் சிலர் தனது தங்கையை வன்புணர்விற்கு உட்படுத்தியதாகவும் இந்த விடயம் குறித்து முன்னர் இருந்த சில பிள்ளைகளும் அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சாமி அம்மாவும் சில பெண்களுடன் தவறான நடத்தையில் ஈடுபடுவதாகவும் அங்கு தங்கியிருந்த சில மாணவிகளையும் அவர் தனது தவறான நடத்தைக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் முன்னைய சிறுமியின் மரணம் தொடர்பிலும் புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்த தகவலை மரணித்த சிறுமியின் தாயும் தெரிவித்துள்ளதுடன், தற்போது கூட ஒரு சிறுமி மரணித்துள்ளதாகவும் இதனால் தான் இனி எவரும் மரணிக்கக் கூடாது என்பதற்காகவே உண்மையை வெளிக் கொண்டு வருவதாகவும் அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்று பொலிசார் மரணித்த சிறுமியின் சகோதரியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய வருமாறு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில் அன்பகம் சிறுவர் இல்ல முகாமையாளரை கேட்ட போது அவர் இதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் இது திட்டமிட்டு புணையப்பட்ட கதை எனவும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-