ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 4ம் திகதி வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
அது அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை தாக்க குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், தென் கொரியாவில் அமெரிக்கா விமானப்படை கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பயிற்சியில் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் ஈடுபட்டுள்ளன.
நேற்று வடகொரியா எல்லையில் அமெரிக்காவின் அதிவேக ‘பி-1 பி லாஞ்சர்ஸ்’ ரகப் போர் விமானங்கள் தாழ்வாக பறந்து எச்சரிக்கை விடுத்தன.
தென் கொரியாவின் குவாம் பகுதியில் உள்ள ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து இந்த போர் விமானங்கள் பறந்து சென்றன.
அமெரிக்க போர் விமானங்களுடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. சுமார் 10 மணி நேரம் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவின் ‘பி-1பி’ லாஞ்சர் அதிவேக போர் விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று 900 கிலோ எடையுள்ள அணு குண்டுகளை வீசும் திறன் கொண்டது.
இதன் மூலம் தாங்கள் எந்த வித தாக்குதலுக்கும் தயார் என வட கொரியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அசத்தலான சாகசத்தை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.






