ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் இந்திய- அவுஸ்திரேலிய தொடர்!!

308

IND VS AUS

சம்பியன்ஸ் லீக் தொடர் முடிந்த கையோடு, அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது இந்தியா. சமீபத்தில் இங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ணம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இரண்டு மாதம் முழு ஓய்வு கிடைத்தது.

தற்போது வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தவிர, சம்பியன்ஸ் லீக் தொடரும் முடிவடைந்துள்ளது. இனி இந்திய அணிக்கு அடுத்த உலக கிண்ணத் தொடர் வரை தொடர்ச்சியான போட்டிகள் காத்திருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பின் சர்வதேச களத்துக்கு திரும்பும் இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சர்வதேச 20-20, 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்திய அணியை சந்திக்க இங்கு வந்துள்ள ஜோர்ஜ் பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய வீரர்கள் அதேவேகத்தில் பயிற்சியை தொடங்கி விட்டனர். முதல் நாளில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்தனர். ராஜ்கோட்டில் நடக்கவுள்ள 20-20 போட்டிக்கு முன் இன்றும் நாளையும் மும்பையில் பயிற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உலக சம்பியன் மற்றும் சர்வதேச தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ள இந்தியா, நம்பர்-2 அவுஸ்திரேலிய அணிகள் மோதும் தொடர் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய தொடருக்கு முன்னாள் அணித்தலைவர் இயன் சப்பல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தோல்வியால் அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே கந்தல் துணியாக கிழிந்து கிடக்கிறது. வரும் நவம்பர் 21ம் திகதி சொந்த மண்ணில் மீண்டும் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் நவம்பவர் 2ம் திகதி வரை இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
இதற்கான நேரமும் இதுவல்ல இதையெல்லாம் உணராமல் பணத்துக்காக இத்தொடருக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா பங்கேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.