தனி மாநிலம் கோரி திரிபுரா மக்கள் போராட்டம்!!

289

திரிபுரா மாநிலத்தில் உள்ள நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பழங்குடியினர் வசிக்கும் பகுதியாக உள்ளது. இதேபோல் மொத்தமுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திரிபுரா சுதேச மக்கள் முன்னணி கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கம்திங்பரி பகுதியில் இருக்கும் அசாம்-அகர்தாலா தேசிய நெடுஞ்சாலையில் திரிபுரா சுதேச மக்கள் முன்னணி தலைவர்களும், ஆதரவாளர்களும் இன்று திரண்டனர்.

சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி மாநிலம் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தேங்கி நின்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், அந்த பகுதியின் அருகிலுள்ள ரெயில்வே தண்டவாளங்களிலும் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நிலவிய போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலையில் தேங்கி நின்ற வாகனங்கள் அகர்தலா-குவை-டெலியமுரா பகுதிகள் வழியாக திருப்பி விடப்பட்டன.

மறியல் போராட்டம் நடந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிலைமை சீரடைந்து வருகிறது என மேற்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திரிபுரா மக்கள் முன்னணி தலைவர்களில் ஒருவரான டெப்பர்மா கூறுகையில், ´´தனி மாநில கோரிக்கை விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரை சந்தித்து பேசவுள்ளோம்.

அமைதியான வழியில் எங்கள் போராட்டம் தொடரும்´´ என தெரிவித்துள்ளார்.