டெங்கு ஒழிப்பிற்கான உடனடி செயற்பாட்டுத் திட்டம் மூன்று வாரங்களுக்குள் நடைமுறை!!

529

டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒரு மாதத்திற்குள் 50 வீதத்தால் குறைப்பதற்கு துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணத்துவ குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நியூஸ்பெஸ்டுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நான்கு விசேட நிபுணர்கள் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்,டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர்களிடம் தாம் அறிக்கை கோரியிருந்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

இந்த விசேட குழுவினர், அமைச்சரவை முன்னிலையிலும் பிரசன்னமாகி நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளனர்.

இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்காக வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சிகிச்சைகளை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது என்ற போதிலும், தற்போதைய நிலை குறித்து திருப்தியடைய முடியாதென சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஊடக அமைச்சு, ஊடக நிறுவனங்கள் இணைந்து டெங்கு பரவுவதை ஒழிப்பதற்காக மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடக நிறுவனங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் இதுகுறித்து செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் டெங்கு ஒழிப்பிற்கான உடனடி செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எனினும், டெங்கு ஒழிப்பிற்காக பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி, பிலிப்பைன்ஸில் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது வெற்றியளிக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.