அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் நீராடிய போது காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன.
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரிவைச் சேர்ந்த குமாரசுவாமி சஜித் (19), குமாரசுவாமி சிதுஜன் (21) ஆகிய சகோதரர்களே உயிரிழந்தவர்கள் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் தம்பட்டையில் உள்ள அவர்களது உறவினர்களின் வீட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் இவர்கள் இருவரும் மற்றுமொரு நண்பரும் சேர்ந்து ரெஜிபோமிலான மிதப்பின் உதவியுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கரை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.
நீராடிக் கொண்டிருக்கையில் மிதப் பின் ஒரு பகுதி சேதமடைந்து இளைய சகோதரர் கடலில் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்றும் நோக்கில் கடலில் பாய்ந்த மூத்த சகோதரரும் கடலலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இச்சம்பவத்தை கண்ணுற்ற உல்லாசப்பிரயாணி ஒருவர் கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றுவதற்காக அதிக பிரயத்தனம் மேற்கொண்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அம்முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் தம்பட்டை மற்றும் சின்னமுகத்துவார மீனவர்களின் உதவியுடன் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
அக்கரைப்பற்று பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் சடலங்களை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளை நடாத்துமாறு உத்தரவிட்டார்.






