வடக்கில் சிறுவர் இல்லங்களை மூட முடியாது : ப.சத்தியலிங்கம்!!

224

நாங்கள் தற்போது திடீரென சிறுவர் இல்லங்களை மூட முடியாது என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுவர் இல்லங்கள் இருக்க வேண்டிய தேவை எங்களுடைய மாகாணத்திற்கு உள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது அண்மையில் அன்பக சிறுவர் இல்லத்தில் சிறுமியொருவர் இறந்தமை மற்றும் வவுனியாவில் சிறுவர் இல்லங்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

சிறுவர் இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பாக நியதிச்சட்டம் கடந்த வருடம் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்டு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லங்களை சட்ட ரீதியாக மூடுவதாக இருந்தால் அந்த நிதிய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது சிறுவர் இல்லங்களில் விடப்படும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர்.

நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்படும் சிறுவர்களுக்கு இல்லங்கள் போதாமல் உள்ளன. இல்லங்களில் சமூக சேவைகள் மேற்கொள்ளப்படுவதால் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் சிறுவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

நாங்கள் தற்போது திடீரென சிறுவர் இல்லங்களை மூட முடியாது. சிறுவர் இல்லங்கள் இருக்க வேண்டிய தேவை எங்களுடைய மாகாணத்திற்கு உள்ளது.

வட மாகாணத்தில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெற்றோர்கள் அற்ற நிலையில் உள்ளனர். அதனால் சிறுவர் இல்லங்களை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

100 இற்கும் மேற்பட்ட சிறுவர் இல்லங்கள் வடக்கில் இருந்த போதிலும் தற்போது 58 சிறுவர் இல்லங்களே இயங்குகின்றன. அவற்றில் 20 சிறுவர் இல்லங்கள் வரையில் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட சில காலம் செல்லும்.

சிறுவர் இல்லங்களில் சிறுவர்கள் சீராக பராமரிக்கப்படாமையினால் உயிராபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட போது,

வவுனியா சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் தமது திணைக்களத்தின் செயற்பாடுகளை எடுத்துக்கூறியிருந்தார். பல சிறுவர்களை பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ இணைக்க முடியாதுள்ளது.

ஒரு சிறுவரை பெற்றோருடன் இணைத்தால் 5 சிறுவர்களை காப்பகத்தில் இணைப்பதற்கான கோரிக்கைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறு வரும் சிறுவர்களை காப்பது தொடர்பாக தீர்மானத்தினை வழங்கும் பட்சத்தில் சிறுவர் காப்பகங்களை மூடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம்.

பல சிறுவர் இல்லங்கள் விதிமுறைக்கு அமைய அமைந்திருக்கவில்லை. எனினும் சேவை அடிப்படையில் அவை இயங்குவதால் அதனை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது இவை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக சிறுவர் இல்லங்களை பதிவதற்கு காணி உரிமம் முக்கியமானது.

ஆனால் அன்பகம் சிறுவர் இல்லத்திற்கு காணி உரிமம் இல்லை. இதனால் அதனை பதிவு செய்வதில் சிறு தடங்கல் உள்ளது என ப.சத்தியலிங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.