வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
பொறுப்புக்களை உணர்ந்தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடக்கு மாகாண சபையை செயலூக்கமுள்ள அரசாக நடத்திச் செல்ல எமது அனுபவப் பகிர்வுகளையும் தேவையான பொழுதில் நாம் வழங்குவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்சருக்கு உதவுகின்றவகையில் சுமூகமான தீர்வுக்கு வரவேண்டும்.
வடக்கு மாகாண சபை ஒன்று இல்லாத சூழலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மத்திய அரசுடன் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு எமது மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வந்துள்ளோம்.
அன்று நாம் கூறிய யதார்த்தத்தை இன்று முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் கூறுவதை நாம் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.
இதையே நாம் இணக்க அரசியல் என்று கூறினோம். இதனூடாகவே எமது மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்த முடியும், அழிந்துபோன எமது வாழ்விடங்களையும் புதுப் பொழிவுடன் மீளக்கட்டி எழுப்ப முடியும்.
இந்த யதார்த்தையே நாம் கூட்டமைப்பினருக்கும் கூறி வந்துள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியிலும் இதே வழிமுறையே வெற்றியளிக்கும். இதை தற்போது உணர்ந்திருக்கும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.
இந்த வழிமுறையை சலுகை அரசியல் என்றும், எலும்புத்துண்டு அரசியல் என்றும் தூற்றியோருக்கு இன்று உண்மை புரிந்திருக்கவேண்டும். எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகை தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசுடன் புரிந்துணர்வுடனான செயற்பாடு ஒன்று அவசியம்.
கூட்டமைப்பின் தலைமை அதை உணர்ந்திருப்பதுபோல் கூறியிருக்கின்றது. மன உறுதியோடு இவ்வழி முறையில் அவர்கள் பயணிப்பார்களாக இருந்தால் அதை நாம் வரவேற்போம்.
வடக்கு மாகாண சபை அரசை புதிய கட்டிடத் தொகுதியிலிருந்தும், புதிய ஆரம்பங்களிலிருந்தும் பெரும் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்க வேண்டியிருப்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். இந்த வேளையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதனூடாகவே வெற்றிகரமான பயணத்தை செய்யமுடியும்.
நடைமுறைச்சாத்தியமான முயற்சிகளுக்கும், மக்களுக்கான சேவைக்கு முன்னுரிமையளிக்கும் பயன் உள்ள வேலைத்திட்டத்துக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.