தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாசைகள் என்பவற்றை பூர்த்தி செய்வார்கள் என்று நாம் நம்புகின்றோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
யாழுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று மாலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சிறு தொழில் முயற்சிக்கான கடன் வழங்கும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அந்நிகழ்வில் அவர் உரையாற்றுகையிலையே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
நீங்கள் வெற்றிகரமான தேர்தலை நடத்தி முடித்ததற்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்கள் விருப்பங்கள் உங்கள் அபிலாசைகள் என்பவற்றை பூர்த்தி செய்வார்கள் என நாம் நம்புகின்றோம். அதற்கு என்றும் நாம் பக்கபலமாக இருப்போம்.
சில தசாப்த காலமாக நடைபெற்று வந்த போரினை அடுத்து இனிவரும் தலைமுறையினர் வளர்ச்சிக்கு உழைக்கும் தருணம் இது அண்மையில் நீங்கள் பெற்று கொண்ட அதிகாரங்கள் மூலம் நீங்கள் சரியான சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போது இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை காணப்படுகின்றது அந்த பிரச்சினை பற்றி இரு சாரார்களும் சந்தித்து உறவாடி சுமூகமான தீர்வினை பெற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தெல்லிப்பளை பகுதியில் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகளை இன்றைய தினம் அதன் பயனாளிகளிடம் கையளித்து இருந்தேன் அப்பகுதியில் 16 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதேவேளை இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் 50ஆயிரம் வீடுகளும் 2015ம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்பட்டு அதன் பயனாளிகளிடம் கையளிக்கப்படும். உங்கள் எதிர்காலம் வளமாக அமைய எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வினை அடுத்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமத்திரன் ஆகியோரையும் சந்தித்து குர்ஷித் கலந்துரையாடினார்.