டெஸ்ட் போட்டியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ரோகித் ஷர்மா!!

321

Rohit Sharma

டெல்லியில் நடந்த சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் ஷர்மா தலைமையில் கைப்பற்றிய 2வது கோப்பை இதுவாகும். கடந்த மே 6-ம் திகதி ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது.

சம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது..

நவீன கிரிக்கெட்டில் அணியில் தொடர்ந்து இடத்தை தக்கவைப்பது முடியாத விஷயம். டெஸ்ட் போட்டியில் அறிமுகம் காண நான் காத்து இருக்கிறேன். அந்த வாய்ப்பு விரைவில் கிட்டும் என்று நம்புகிறேன். சரியான நேரம் மற்றும் வாய்ப்புக்காக நான் காத்து இருக்கிறேன்.

சம்பியன்ஸ் லீக் வெற்றி எங்களுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. எங்கள் அணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட அதிகப்படியான நெருக்கடியை நாங்கள் நல்ல முறையில் கையாண்டோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் நிறைய சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம்.

ஹர்பஜன்சிங் சிறந்த வீரர். அவர் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் அருமையாக செயல்பட்டு ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக திருப்பினார். அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒன்று, இரண்டு ஓவர்களின் அடிப்படையில் போட்டியின் முடிவு அமைந்ததாக நான் நினைக்கவில்லை.

அணித்தலைவர் சிறப்பாக விளையாடினால் அணியினரை ஈர்க்க முடியும். டோனியை போல் நான் பொறுப்புடன் அணியை வழிநடத்தியதாக நம்புகிறேன். அணியின் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பையும், ஆதரவையும் அளித்தனர்.

20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டெண்டுல்கருக்கு இது சரியான வழியனுப்பு விழா என்று நான் நினைக்கிறேன். டெண்டுல்கருக்காக கோப்பையை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே ஆண்டில் இரண்டு கோப்பையை வென்றது பூரிப்பாக இருக்கிறது என ரோகித்ஷர்மா கூறினார்.

26 வயதான ரோகித்ஷர்மா இதுவரை 102 ஒருநாள் போட்டி மற்றும் 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருந்தாலும் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகவில்லை.