அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

334

North Korea

தென்கொரிய மற்றும் ஜப்பானியக் கப்பல்கள் அமெரிக்காவின் அணுசக்தி விமானத்துடன் இணைந்து இன்று தொடங்க உள்ள ஒரு கூட்டு கடற்படை ஒத்திகை முயற்சியை வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியா சமீபத்தில் ப்ளுடோனியம் ஆலை ஒன்றின் இயக்கத்தை மீண்டும் துவக்கியுள்ளது. இது அவர்களின் அணுசக்தி உற்பத்திக்கான முயற்சி என்று கருதிய தென் கொரியா, வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதல் முயற்சியை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை இன்று கப்பற்படை ஒத்திகையைத் துவங்க இருந்தன. இதில் அமெரிக்காவின் அணுஆற்றல் விமானமான யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் பங்குபெறும் என்று கூறப்படுகின்றது.

வடகொரியாவும் தன்னுடைய துருப்புகளை எந்த நேரத்திலும் தாக்குதலைத் தொடங்கும் வண்ணம் தயாராக வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கொரியாவின் மக்கள் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் நிலைமைகள் மீண்டும் பலவீனப்படுவதாகத் தெரிவித்துள்ள வடகொரியா, அமெரிக்கா தங்களை நெருங்கத் தொடங்குமேயானால் வடகொரியாவின் ராணுவம் ஏற்படுத்தும் பேரழிவுகள் கணிக்க முடியாதவையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கு நடைபெறவிருக்கும் எதிர்பாராத பயங்கரமான பேரழிவிற்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகளே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியதிருக்கும் என்றும் வடகொரிய அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்தக் கூட்டுப் படைகளின் ராணுவப்பயிற்சி தென்கொரியாவை நோக்கி உருவாகியுள்ள ஒரு சூறாவளியின் விளைவாகத் தள்ளிப் போடப்படலாம் என்று அமெரிக்கா-தென்கொரியா கூட்டுப் படைகளின் கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.