வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்பான தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி!!

266

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வௌி மாகாணங்களுக்கான பஸ் சேவைகளையும் பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளையும் முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் பயன்பாடற்ற நிலையிலேயே அது காணப்படுகின்றது.

நேர அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தோன்றிய முரண்பாடே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் ஊழியர்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் புதிய பஸ் நிலையத்தில் வௌி மாகாணங்களுக்கான பஸ் சேவைகளையும் பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனை பரீட்சார்த்தமாக ஒரு மாதத்திற்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்கள் இயங்குவதற்கான நேர அட்டவணை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.