யாழ். நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

292

 
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மெய்ப்பாதுகாவலர், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்த நிலையில், அவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த மெய்ப்பாதுகாவலரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் 17 ஆண்டு காலமாக நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அத்துடன்,யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு, உப பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.