சட்டத்தின் பாதுகாவலனை துப்பாக்கி குண்டால் துளைத்துவிட முடியாது : வே.இராதாகிருஸ்ணன்!!

243

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும், இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

உண்மையாக சட்டத்தை பாதுகாக்கின்ற ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட முடியாது. அது முட்டாள்தனமான ஒரு செயற்பாடாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டத்துறைக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருடைய திட்டமிட்ட ஒரு செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

கடந்த காலங்களில் அவர் கொடுத்துள்ள பல தீர்ப்புகள் இதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. தற்பொழுது நடைபெற்று வருகின்ற வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பாகவும் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த குற்றச் செயலிலும் பல கோடி ரூபா பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளமை தெளிவாகின்றது. எனவே அவரை முடக்குகின்ற அல்லது பயமுறுத்துகின்ற ஒரு செயலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதனையெல்லாம் கண்டு அஞ்சமாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. எனவே அவரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவருடைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

அதே போல இலங்கையில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என கருதுகின்ற அனைவருடைய ஒத்துழைப்பும் அவருக்கு கிடைக்க வேண்டும்.

அந்த இறைவனுக்கே பொறுக்காத ஒரு செயலை செய்ய முற்பட்ட காரணத்தால் அவருடைய உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய மெய்ப்பாதுகாவலரின் மறைவானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இந்த தண்டனையானது அனைத்து நீதிபதிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற ஒரு தீர்ப்பாக அமைய வேண்டும்.

இதனை விசேட நீதிமன்றம் மூலம் விசாரணை செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.