கடலில் உயிருக்கு போராடிய இரண்டு யானைகளை பாதுகாப்பாக மீட்ட கடற்படை!!

511

 
கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு யானைகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

திருகோணமலை – ரவுண்ட் தீவு மற்றும் கெவுளியாமுனை என்பனவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (23) காலை குறித்த யானைகள் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு கப்பலின் (IPC) ஊடாக குறித்த இரண்டு யானைகளும் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருகோணமலை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும், கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த இரண்டு யானைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 11ம் திகதி கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட யானையொன்றும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.