வவுனியா தாலிக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

898

 
வவுனியா தாலிக்குளம் மக்கள் இன்று (26.07.2017) தமது கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று காலை ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தாலிக்குளம் கிராமத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற சுமார் முப்பது குடும்பங்களிற்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

அத்துடன் அங்கு வசிக்கும் உப குடும்பங்கள் பலவற்றிற்கும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாகவே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

போரினால் பாதிக்கப்பட்டு எமது உடைமைகள் அனைத்தையும் இழந்து அகதி வாழ்வு வாழ்ந்து இங்கு குடியேறியிருந்த நிலையில் கூட, எமக்கு தற்போது வரை வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையினால் எமது சொந்த நிலத்திலேயே அகதி போன்று வாழ வேண்டிய நிலையே தற்போது உள்ளது.

அத்துடன் சமுர்த்திக் கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. எமது கிராமத்திற்கான வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருப்பதுடன் குடிநீர் பிரச்சனையையும் எதிர்நோக்கி வருகின்றோம். எமது கிராமத்தை அரச அதிகாரிகள் கைவிட்டு விட்டார்களா…? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.