கால்பந்து போட்டி சவாலில் தோல்வி : எலி இறைச்சி சாப்பிட்ட மேயர்!!

657

கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பாரிஸ் அணி தோல்வி அடைந்ததால் மேயர் ஒருவர் எலி இறைச்சி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள மோன்ட் டி மர்சான் நகர் மேயராக உள்ளார் சார்லஸ் டயோட். கால்பந்து விளையாட்டு ரசிகரான இவர் போட்டிகள் நடக்கும்போது யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாரிஸ் ஜெயின் ஜெர்மன் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் இடையே கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் பந்தயம் கட்டிய மேயர், பாரிஸ் அணி தோல்வியடைந்தால் எலி இறைச்சி சாப்பிடுவதாக சவால் விட்டார்.

விளையாட்டுப் போட்டி தொடங்கியதும் முதல் சுற்றில் பாரிஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது சுற்றில் பாரிஸ் அணி படு தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து சவால் விட்டவாறு மேயர் எலி இறைச்சி சாப்பிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சில நாட்களுக்கு பின்னர், எலி இறைச்சி சாப்பிடுவதாக மேயர் ஒப்புக்கொண்டதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஹோட்டல் ஒன்றில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேஜையில் எலி இறைச்சி பரிமாறப்பட்டதும், மேயர் எவ்வித தயக்கமும் இன்றி எலி இறைச்சியை முழுவதுமாக சுவைத்து முடித்துள்ளார்.

”கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன். எலி இறைச்சி மிகவும் சுவையாக, முயல் இறைச்சியைப் போல் நன்றாக இருந்தது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மேயர்.