10 வயதுச் சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

356

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்த 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

சண்டீகரில் தமது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 26 வாரங்கள் கருவுற்று இருப்பதாக தெரிய வந்தது. இந்த வழக்கில் அந்த சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சண்டீகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரியும் இதுபோன்ற விவகாரங்களில் அரசு முடிவெடுக்க ஏதுவாக வழிகாட்டுதல் நெறிகளை வகுக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையின் மருத்துவர்கள், கருவுற்ற அந்த சிறுமியின் உடலை பரிசோதனை செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் 32 வாரங்கள் கடந்த நிலையில் சிறுமியின் கருவைக் கலைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மருத்துவ அறிக்கையில் கருவைக் கலைப்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.