நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல :  சிவகரன் காட்டம்!!

312

இன்று வவுனியாவில் இடம்பெற்ற ‘தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் ?” என்னும் தலைப்பில் இடம்பெற்ற கலந்தாய்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும்போது கடமை தவறிய நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஒரு மெய்பாதுகாவலராக இருந்தவர் அந்த மெய்பாதுகாவலரின் நிலைப்பாட்டுக்கு அப்பால் சென்று பஞ்சாயத்து தீர்க்கப்போய் நடைபெற்ற ஒரு சம்பவம் அவரை தியாகியாக்கி எம்மவர்கள் வீர வணக்கம் செலுத்துகின்றார்கள். நான் நினைக்கின்றேன் சிலையும் வைத்து விடுவார்கள் போல் இருக்கின்றது.

பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கின்றது. நாங்கள் இழக்க முடியாதவர்கள், எல்லோரையும் இழந்தவர்கள். இந்த விடுதலையில் நாங்கள் எத்தனையோ தியாகங்களையெல்லாம் சந்தித்தவர்கள். இந்த விடுதலைக்காக பல்வேறு கால கட்டங்களில் போராடியவர்கள்.

அவர் தன்னுடைய கடமையை கூட சரியாக செய்யவில்லை. கடமையை கூட சரியாக செய்யாத பொலிஸ்காரனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கின்றார்கள். அதாவது இராணுவ சட்டத்தின் பிரகாரம் தன்னுடைய துப்பாக்கியை எதிரி பறித்து அவனுடைய துப்பாக்கியால் எதிரி சுட்டவனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம் அதற்கு எம்மவர்கள் வீர வணக்கம், தியாகி, அறப்போர் நாயகம் என்றெல்லாம் சொல்கின்றார்கள்.

நீதிபதியை இலக்கு வைக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். இப்பொழுது நீதிபதியும் முதலமைச்சர் ஆகப்போகின்றார் அவரையும் தியாகி என்றெல்லாம் சொல்கின்றார்கள். எனக்கு தெரியவில்லை இந்த நீதி, நீதிபதிகளெல்லாம் இந்த பயங்கரவாத அரசியலமைப்புக்கு உட்படுத்தப்பட்டு தமிழ் மக்களுடைய போக்குகளுக்கு எவ்வாறான நிலைப்பாடு.

அண்மையில் கண்ணதாசனுடைய தீர்ப்பு. எனக்கு தெரியவில்லை. புனர்வாழ்வு அளிப்பது தண்டனையில்லையா? அல்லது அதற்குப் பின்னரும் தண்டனை வழங்குவதா? கண்ணதாசனுக்கு இப்பொழுது ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் முன்னாள் போராளிகள் எல்லோருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டுமா? அல்லது ஆதரவாக இருந்த எங்களை போன்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை தர வேண்டுமா? இது விளங்கவில்லை.

இந்த ஜனநாயக சூழல் எவ்வாறு போகின்றது. ஜனநாயக சூழலை உருவாக்குகின்ற நிலை எப்படி போகின்றது. அல்லது இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் அதற்கு எவ்வளவு ஒத்தூதப் போகின்றார்கள். ஒன்றுமே புரியாத காலகட்டமாக இருக்கின்றது.

அரசோடு ஒத்துழைப்பதற்கு தண்டனையில்லை. ஒத்துழைக்காதவர்களுக்கு தண்டனையா? என்ன நீதி? என்ன நியாயம்? கங்காரு நீதிமன்றம் போல் தான் இந்த நீதி செயற்பாடுகளும் போகின்றனவா? என்ற கேள்விகளும் எழுகின்றது.

ஆகவே தமிழ் மக்களுடைய ஒழுக்க நெறி முறைகள் சார்ந்த அரசியல் கட்டமைப்புக்கள் போக்குகள் எல்லாம் திசைமாறிய நிலையிலே ஒரு வீர வணக்கம் போடுகின்ற நிலைப்பாடுகளோடு வந்து நிற்பது வெட்ககேடான காரியமாக இருக்கிறது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் போக்குக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்தார்.