வவுனியாவில் அரசியல் கைதிகளின் படுகொலைகளைக் நினைவுகூர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

221

 
சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமாணவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு இன்று (08.08.2017) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா இ.போ.ச பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமும் அஞ்சலிச் சுடர் ஏற்றல் நிகழ்வும் இடம்பெற்றது.

போராட்டத்தின் போது சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நிமலரூபனின் படுகொலைக்கு பதில் என்ன?, டில்ருக்சனின் படுகொலைக்கு பதில் என்ன?, அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? , நீதி அமைச்சரே பதில் கூறு என பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயலாளர் சு.டொன்பொஸ்கோ, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம தியாகராசா, சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.​
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​