கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி!!

435

ஊவா, பரணகம திம்புலன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திம்புலன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த பெண்ணின் காதலன் குறித்த பெண்ணை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன் கணவர் வருகை தருவதை கண்டு ஓடியுள்ளதாக பொலிஸாரிடம் பெண்ணின் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளதுடன் பிள்ளைகள் அவர்களின் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பதுளை மாவட்ட பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், 1.5கிலோ மீற்றர் தூரம் சென்ற மோப்ப நாய், 37 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபரின் வீட்டை சென்றடைந்துள்ளது.

எனினும் 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபரும் அவரது மனைவியும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரின் வீட்டின் முன் சுவற்றில் இரத்தக் கறை படிந்திருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் தொடர்பான மரண விசாரணைகள் வெலிமடை நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.