வவுனியாவில் புகையிரத கடவை ஊழியரை பொலிசார் அச்சுறுத்துவதாக முறைப்பாடு!!

222

 
வவுனியாவில் புகையிரதக்கடவையில் பணியாற்றும் ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று நேற்று (23.08.2017) பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பாடசாலை விதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை வீதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிவரும் பரமசிவம் குவேந்திரன் (வயது 25) என்பவருக்கே பொலிசார் நேற்று முன்தினம் (22.08.2017) உயிர் அச்சுறுத்தல் விடுத்தள்ளதாக வவுனியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் முறைப்பாடு அளித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தபின்னர் கருத்து தெரிவித்த எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார்,

மன்னார் மதவாச்சியை இணைக்கும் புகையிரதச் சாலையில் பணியாற்றிவரும் எமது ஊழியருக்கு எதிராக பொலிசார் பொய் குற்றச்சாட்டை சுமத்தியதுடன் ஊழியரின் தாயாரிடம் உமது மகனை வேலைக்கு அனுப்பவேண்டாம் அவ்வாறு அனுப்பினால் பிணமாகவே எடுத்துச்செல்ல வேண்டியிருக்கும் என நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்ததுடன் வேலையை ராஜினாமா செய்து கடிதத்தை பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிசாரினால் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு நீதி கிடைக்கும்வரை இன்று (24.08) இரவு 12 மணியிலிருந்து வடக்கில் அனைத்து புகையிரதகடவை காப்பாளர்களும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.