வவுனியாவிலிருந்து புகையிரதக் கடவை காப்பாளர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக நடைபயணம்!!

224

 
வடக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (25.08) பகல் 12 மணிக்கு வவுனியாவிலிருந்து ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கத்துடன் நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.ராஜ்குமார் தலைமையில் ஏழு உறுப்பினர்கள் இந்த நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாலிருந்து ஆரம்பமான இந்நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆரம்பித்து வைத்தார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் 250 ரூபா ஊதியத்திற்கு அரசாங்கம் இந்த ஊழியர்களை அடிமைகள் போல் நடத்தி வருகிறது என குற்றஞ்சாட்டினார்.

நடைபயணத்தின் முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.ராஜ்குமார்,

கடந்த நான்கு ஆண்டு காலமாக பொலிசாரினதும் புகையிரத திணைக்களகத்தின் அதிகாரிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளோம் என குறிப்பிட்ட அவர் எமது நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எங்கள் வாழ்கையை நடத்துவதற்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வவுனியாவிலிருந்து கொழும்புக்கு எமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார்.