பிறந்த நாளில் பரிதாபகரமாக உயிரிழந்த யாழ். மாணவன் : சோகமயமான யாழ் குடாநாடு!!

394

 
யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுதீவு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஆறு மாணவர்கள் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம், பண்ணை, மண்டைதீவு கடலில் நேற்று பிறந்த நாள் கொண்டாடச் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

படகு கவிழ்ந்தமையில் மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய அனர்த்தத்தின் போது முதற்கட்டமாக ஐந்து மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர் ஒருவரின் சடலம் கடற்படையினரால் தேடப்பட்டது.

எனினும் மூன்று மணி நேர தீவிர தேடுதலின் போது ஆறாவது மாணவின் சடலமும் மீட்கப்பட்டது. நேற்றையதினம் பிறந்த நாளை கொண்டாடிய மாணவனின் சடலமே இறுதியாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்த படகில் ஏழு மாணவர்கள் பயணித்துள்ளனர்.

எனினும் ஒரு மாணவன் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினார். இந்த மாணவர்கள் உரிய தரமற்ற படகில் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன், லிங்கநாதன் ரஜீவ், ஜெய்சாந்த் தினேஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான தேவகுமார் தனுரதன், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலய மாணவனான கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ். மத்திய கல்லூரி மாணவன் தனுசன் ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

ஏனைய மாணவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு 18 மாணவர்கள் சென்றுள்ளதாக ஆபத்திலிருந்து தப்பி வந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய அனர்த்தம் யாழ் குடா நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.