வவுனியாவில் 151வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வறுமையான குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!!

222

 
வவுனியா பொலிஸார் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினரும் இணைந்து வவுனியா அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்தைச்சேர்ந்தவருக்கு புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (03.09) மாலை 4 மணியளவில் கையளிக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் அறிவுறுத்தலுக்கமைய வவுனியாவில் ஆறு கிராம சேவையாளர் பகுதியை ஒருங்கிணைத்து ”கிராமத்திற்கு பொலிஸ்” என்ற தொனிப்பொருளில் பொலிஸ் நடமாடும் சேவை ஒன்றினை கடந்த ஒரு மாத காலமாக வவுனியா பொலிஸார் நடாத்தி வந்தனர்.

இதனடிப்படையில் நேற்று (03.09) இறுதி நிகழ்வொன்றினை வவுனியா அண்ணாநகர் கிராமத்தின் மைதானத்தில் வவுனியா பொலிஸாரினால் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.

இந்நிகழ்வின் முதற்கட்டமாக அண்ணாநகர் கிராமத்தில் வசிக்கும் கந்தையா கமலநாதன் என்பவருக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினரும் வவுனியா மாவட்ட பொலிஸாரும் இணைந்து குடிவாழ்வதற்கான சிறந்த இல்லம் ஒன்றை கட்டிமுடித்து இன்றைய தினம் பயனாளியின் கையில் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விருந்தினர்களை வவுனியா அண்ணாநகர் பாடசாலையின் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்று விருந்தினர் மேடைக்கு அழைத்துச்சென்றனர். மேலும் இந்நிகழ்வில் மூக்குகண்ணாடி வழங்கி வைக்கப்பட்டதுடன், வறிய குடும்பத்தைச்சேர்ந்த 5மாணவ்ர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், காத்தார்சின்னக்குளம் கிராம சேவையாளர் பகுதியைச் சேர்ந்த சிறந்த சமூகசேவையாளர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு கெளரவிப்பும் வழங்கப்பட்டதுடன், பூந்தோட்டம் பகுதியில் கல்வி கற்பிக்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்களையும் கெளரவித்திருந்தனர்.

இதேவேளை பொலிஸாரின் நடமாடும் சேவை காலத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்களில் வெற்றி பெற்ற அணியினருக்குரிய வெற்றிகிண்ணங்கள்,பதக்கங்கள், சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இக்காலப் பகுதியில் மக்களுடன் மக்களாக நின்ற பொலிஸார் சிலரும் கெளரவிக்கப் பட்டிருந்தனர்.

அத்துடன் கிராமசேவையாளர்களான க.தர்சன் மற்றும் சி.ரவீந்திரன் ஆகியோரும் ஓய்வுநிலை அதிபர் தேசபந்து சிவஞானம் அவர்களையும் சிறந்த சமூகசேவையாளர்கள் என கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஆகியோருடன் முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா தலமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராச்சி, மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையளர் திருமதி .குரூஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த நடன குழுவினரின் நடனங்களும் கலைநிகழ்வுகள் பலதும் இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான கிராமவாசிகளும் கலந்துகொண்டிருந்தனர்.