வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து மிகவும் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம்(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப் பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் ஹயஸ்ரக வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், தான் படச் சூட்டிங் செய்ய 15 ஆடுகள் தேவை என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆட்டு உரிமையாளரும் சம்மதித்த நிலையில் பிறிதொரு இடத்தில் சூட்டிங் நடப்பதால் ஆடுகளை கொண்டு செல்ல வேண்டும் என 15 ஆடுகளை ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்றியுள்ளார்.
ஆடுகளை வழங்கியமைக்காக ஆட்டு உரிமையாளருக்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை வாடகையாகக் கொடுத்துள்ளார்.
ஆடுகளை ஏற்றுக் கொண்டு ஆட்டு உரிமையாளரையும் அழைத்துக் கொண்டு வவுனியா நகரை நோக்கி வந்த குறித்த நபர் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ உணவுச் சாலை அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சோடா ஒன்று வாங்கி வருமாறு 200 ரூபாய் பணத்தை கொடுத்து ஆட்டு உரிமையாளரை வாகனத்தில் இருந்து இறக்கியுள்ளார்.
சோடா வாங்கிக் கொண்டு வாகனம் நின்ற இடத்திற்கு ஆட்டு உரிமையாளர் வந்த போது வாகனம் அவ்விடத்தில் இல்லை.
இதனையடுத்து திட்டமிட்டு திருட்டு இடம்பெற்றதை உணர்ந்த ஆட்டு உரிமையாளர் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.