சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்திருந்த நிலையில் சிறுவன் மீட்பு!!

271

சிலாபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவனை சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிலாபம், முகுனுவட்டன புளியன்கடவர வெல்பொத்துவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஐந்து வயது சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைபாட்டில் பாலர் பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாகியிருந்த சிறுவனை யாரோ வாகனமொன்றில் கடத்திச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்ற உடனேயே பொலிஸார் சிறுவனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். தமது மகன் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்த போது வீட்டிற்கு எதிரில் நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனம் மிக வேகமாக புறப்பட்டுச் சென்றதாகவும், இதனை அடுத்து மகனை காணவில்லை எனவும் பெற்றோர் இதன்போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் குறித்த லொறியை பின்தொடர்ந்து செல்ல நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன் போது சிறுவன் சலவை இயந்திரத்தில் ஒளிந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

பாலர் பாடசாலைக்குச் செல்ல விருப்பமில்லாத காரணத்தினால் தான் சலவை இயந்திரத்தில் ஒளிந்து கொண்டதாக சிறுவன் கூறியுள்ளான்.